Sunday, March 15, 2009

Temple history

அருள்மிகு அஷ்டாதசபுஜமகாலக்ஷ்மி துர்காம்பிகாஆலயம், துர்கா காலனி,இராஜகிழ்பாக்கம்,சென்னை 73.

கிழக்கு தாம்பரத்திலிருந்து நான்கு கிலோமீட்டிரில் வேளாச்சேரி சாலையை ஒட்டி மேற்படி பதினெட்டு கை துர்காம்பிகை ஆலயம் அமைந்துள்ளது. இதில் பரிவார மூர்த்தங்களாக வினாயகர், விசாலாக்ஷி சமேத விஸ்வநாதர், சாஸ்தா, வள்ளி தெய்வ நாயகி சமேத ஷண்முகர், லக்ஷ்மி சமேத அனந்தபத்மனாபர்,ஆஞ்சனேயர்மற்றும் நவகிரகங்களும் உள்ளன. ஆலய பின்புறத்தில் அரச மரத்தடியில் நாகர்,வினாயகரும் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் ஆலயதில் வழிபடும் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்து வருகிறாள்.

1965-இல் தின்னம் T.S. நடேச ஐயர் மேற்கண்ட அபூர்வமான ஆலயத்தை முதலில் சிறியதாக பிரதிஷ்டை செய்தார்.
மயிலாடுதுறைக்கு அருகில் தருமபுரம் ஆதினம், மற்றும் சேலத்தின் ஸ்கந்த ஆசிரமம் இவற்றைத் தவிர தமிழ் நாட்டில் இதுவே பதினேட்டு கை துர்காம்பிகையின் ஆலயமாக அமையப் பெற்றது. நடேச ஐயர் பல ஆண்டுகள் காயத்ரி சத் சங்கம் என்ற ஒரு சிறிய அமைப்பில் பேராசிரியர் ஜெகபதி உள்பட பலரின் உதவியுடன் இவ்வாலயத்தில் தினப்படி பூஜை, நவராத்ரி பூஜை, விஜயதசமி,சண்டி ஹோமம் இவற்றை நடத்தி வந்தார்.

1977-ல் நடேச ஐயர் காலமானபிறகு அவர் மகன் ந. சேதுரத்தினத்தின் உதவியுடன் பக்தர்களே ஆலயத்தை நிர்வகித்து வந்தனர். 1986-இல் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு அதில் ஒரு விசேஷ கமிட்டி நியமனம் ஆயிற்று. இதில் ஆர் சுவாமி நாதன் காரியதரிசியாகவும், மற்றும் பேராசிரியர் திரு. ஜெகபதி, ஆர். கணேச ஐயர், திருமதி கல்பனா சீனிவாஸ் திரு.வெங்கட்ராமன் இவர்கள் முக்கிய பொறுப்பேற்று இருந்தனர். 1987-ல் நடேச ஐயர் மகன் ந. சேது ரத்தினம் இச்சங்கத்துடன் ஒத்துழைத்து ஆலயத்தை அதற்கு நன்கொடையாக வழங்கினார். அதே சமயம் அவர் மனைவி திருமதி சேது ரத்தினம் அக்கம் பக்கத்து நிலத்தையும் கட்டிடத்தையும் குறைந்த கிரயத்திற்கு கொடுத்தார். உடனே அச்சங்கம் பெற்றுக்கொன்ட ஆஸ்திகளை ஒரு டிரஸ்ட்டாக ரெஜிஸ்டர் செய்து ஆலய நிர்வாகத்தை நடத்தலாயிற்று. ந. சேது ரத்தினதை ஆயுள் டிரஸ்டியாக நியமித்தது. வழக்கம்போல் பூஜைகளும் விழாக்களும் நடந்து வந்தன.

நிற்க, அருகாமையில் இருந்த மெட்ரோ பிளாட்ஸ் உரிமையாளரான N. நடராஜ ஐயர் ஆலயத்தை பெரியதாகக் கட்டிக் கொடுக்க வேண்டுதல் கொண்டு விரும்பியதால் 1989-ல் பேராசிரியர் S.ஜெகபதி காரியதரிசியாக இருக்கையில் டிரஸ்ட் அவரை ஆகம சாஸ்த்திரங்களின் படி ஆலயத்தை புதுப்பித்தும் பெரிதாகக் கட்டித்தரக் கேட்டுக்கொண்டது. சென்னை காளிகாம்பாள் கோவிலின் மூத்த சிவாச்சாரியார் வந்திருந்து கொடுத்த ஆலோசனையின்படி நூதன பெரிய ஆலயத்தின் அமைப்பு நிர்ணயிக்கபட்டது. அதன்படி நடராஜ ஐயர் இரண்டு ஆண்டுகளில் நூதன பெரிய ஆலயத்தைக் கட்டி கொடுத்தார். 1991-ல் பதினெட்டு கை துர்காம்பிகையின் பெரிய மூர்த்தமும், அதன் மேல் தக்க பீடத்தில் ஆதியில் பிரதிஷ்டை ஆன மூர்த்தமும் இதர பரிவார்த்த மூர்த்தங்களும் புதிதாகச் சேர்க்கப் பட்ட சாஸ்தாவும், பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1991 தை மாதம் நூதன பெரிய ஆலயத்தின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மாங்காடு காமாக்ஷி அம்மன் கோவில் சுப்ரமணிய குருக்களின் தலைமையில் வெகு விமரிசையாக மேற்படி டிரஸ்டினால் நிறைவேற்றப்பட்டது. அம்பாளின் பஞ்சலோக விக்ரகத்தையும் நடராஜ் ஐயர் வழங்கினார். இவ்வாலயத்தில்தான் தற்போது அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இவ்வாலயத்தில் இரு மூல
மூர்த்தங்கள் இருப்பது குறிப்படதக்கது.

1991-க்குப் பிறகு டிரஸ்டி நிர்வாகத்தை கவனித்து வருகிறது . நடராஜ் ஐயரின் மருமகனான D. வெஙகட்ராமன் இரண்டாவது ஆயுள் டிரஸ்டியாக நியமிக்கப்பட்டார். சரோஜா வெங்கடராமன் நிர்வகத்துடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளார். சமீபத்தில் திரு. ராமச்சந்திரன் இணைக்கப்பட்டார். ஏற்கனவே இருந்ததவர்கள் தொடர்ந்து பொறுப்புக்களை கவனித்து வருகிறார்கள். நித்தியப்படி பூஜைகள், விசேஷ பூஜைகள், இராகுகால பூஜைகள்,பிரதோஷ பூஜை, சித்திரா பௌர்ணமி பால்குடம், ஆடிப்பூரம், நவராத்திரி திருவிழா,விஜயதசமி, அன்று சண்டி ஹோமம், மாலையில் அம்பாள் புறப்பாடு இவை யாவும் அம்பாளின் அருளால் செவ்வனே நிறைவேறி வருகின்றன. அம்பாளுக்கு வெள்ளிக்கவசம் செய்யப் பட்டிருக்கிறது. மற்றும் பல பக்தர்களின் நன்கொடைகளின் மூலம் ஆலயம் வளர்ந்திருக்கிறது.

நிற்க,2008 தை மாதம் பல அன்பர்கள் பல திருப்பணிகளை நிறைவேற்றிக்
கொடுத்து, மற்றும் பலருடைய உதவியுடன் ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக அம்பாளின் அருளால் நிறைவேறியது.

ஆலயத்தின் மேற்கொண்ட முக்கிய தேவைகள் பின்புறத்தில் ஒரு மடப்பள்ளி, ஒரு அலுவலக அறை, ஆதியில் அம்பாள் பிரதிஷ்டையான ஸ்தலத்தில் காஞ்சி பெரியவாளால் அருளப்பட்ட ஆலோசனைப்படி, வில்வமரம் நடுதல், இப்பணிகள் நிற்கின்றன.
ஆலயம் மேலும் வளர பக்தர்களிடமிருந்தும்,அன்பர்களிடமிருந்தும் நன்கொடைகள் தேவைப்படுகின்றன. ஆலயத்திற்க்கு உதவி, எல்லாம் வல்ல அருள்மிகு அஷ்டாதச புஜ மகா லக்ஷ்மி துர்கையின் அருளை பெற வேண்டுமென்று டிரஸ்ட் பொது மக்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறது.

No comments:

Post a Comment